புதன், டிசம்பர் 18, 2013

மைசூர்பா (கிருஷ்ணா ஸ்விட்ஸ்)






 



தேவையானவை
கடலை மாவு : ஒரு கப்
சர்க்கரை : மூன்று கப் ( அதிகம் இனிப்பு வேண்டாதவர்கள் இரண்டரை கப் கூட வைத்துக்கலாம்)
நெய் : 3 கப்

எப்படி செய்வது

அடிகனமான வாணல் (அல்லது பிரஷர் பேன் கூட நல்லது) சர்க்கரையை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சூடாக்கவும்
ஒரு சதுரமான ட்ரேவில் நெய் தடவி எடுத்து அருகில் வைக்கவும்
கடலைமாவை சலித்து வைத்துக்கொள்ளுங்கள்

சர்க்கரை கரைந்ததும் வடிகட்டியில் வடித்து மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும்
ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை குறைத்து கடலை மாவை கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்
மூன்று கப் நெய்யில் கால் கப் தவிர மீதத்தை சிறிது சிறிதாக ஊற்றி விடாமல் கிளறவும். இப்போது அடுப்பை நிதானமாக எறிய விட வேண்டும்
ஒட்டாமல் மைசூர்பா பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கீழே வைத்து மீண்டும் ஐந்து நிமிடம் கிளறவும்.
இந்த ஸ்டேஜில் ஒரு நிமிடம் கிளறுவதை நிறுத்தி மீதமிருக்கும் நெய்யை சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் நன்கு கிளறி ட்ரேவில் கொட்டவும்
சிறிது நேரம் ஆறவிட்டு விரும்பிய அளவில் துண்டு போடவும்

அது என்ன மைசூர்பா பதம்?
ஸ்டேஜ்  1 : கடலை மாவை நன்கு பாகுடன் கிளறவும்
ஸ்டேஜ் 2:  கடலை மாவு பாகு + நெய்யுடன் சேர்ந்து வேக ஆரம்பிக்கும் ஊற்றும் நெய் அனைத்தையும் உறிஞ்சும்
ஸ்டேஜ் 3: லேசாக ஓரங்களில் நுரைக்கும், கொதி வரும்
ஸ்டேஞ் : 4 கலர் மாறி லேசான வெள்ளை நிறமாகவும் ஓரங்களில் நன்கு நுரைத்தும் வரும்
ஸ்டேஜ் 5 : இப்படி கலர் மாறியதும் பால் பொங்குவது போல் லேசாக பொங்கி வரும். இதுதான் மைசூர்பா பதம். இப்போது இறக்கி வைத்து கைவிடாமல் அந்த பாத்திர சூட்டில் ஐந்து நிமிடம் கிளறவும்
ஸ்டேஜ் : 6 கிளறுவதை நிறுத்தி நெய் விட்டு ஒரு நிமிடம் அப்படியே விடவும், பின் மீண்டும் 2 நிமிடம் கிளறி ட்ரேக்கு மாற்றுங்கள்.







 



மைசூர்பா செய்வதில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் மற்றும் தவறவிடக்கூடாதவை இவை.
அளவு மிக முக்கியம், நெய் மட்டுமே உபயோகித்தும் மைசூர்பா செய்யலாம்.  அவ்வளவு நெய் தேவையில்லை என்றால் மூன்றில் ஒரு பங்கு சன் ப்ளவர் ஆயில் சேர்க்கலாம். அதே சாப்டான பதம் வரும்.
பாகு அளவும் பதமும் தவற விடக்கூடாதது. சர்க்கரை தண்ணீரில் கலந்ததும் அதனை வடிகட்டி மீண்டும் பாகு செய்ய வைத்தல் நலம். இதனால் சர்க்கரையில் இருக்கும் தூசு, கசடுகள் கழிக்கலாம்
முதலில் பிசுபிசுப்பாபாகு, பின் கால் கம்பி, அரைக்கம்பி, அடுத்து ஒரு கம்பி பதம் வரும். இதுவே சரியான மைசூர்பா பதம். 
கொட்டி கிளறும் போது அதனை சிறிது ஆறவிடுதலும் கீழ் இறக்கி வைத்து கிளறி மீண்டும் கொஞ்சம் நெய்விடுதலும் அவசியம்.
எந்த கப்பில் மாவை எடுக்கிறிர்களோ அதே கப்பில் சர்க்கரை, நெய் எடுப்பது கொஞ்சம் ஈசியானது


பி.கு. குங்குமம் தோழி இதழில் வெளியான கிருஷ்ணா ஸ்விட் மைசூர்பா சீக்ரெட் கிச்சன்

சனி, ஜூன் 08, 2013

மக்காசோள ரவை கிச்சடி



என்னென்ன தேவை

மக்காசோள ரவை :  1 கப்
பொடியாக நறுக்கிய காய்கள் : ஒரு கப் (பட்டாணி, கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ்
பொடியாக நறுக்கிய வெங்காயம் : கால் கப்
பொடியாக நறுக்கிய சிறிய தக்காளி ஒன்று
இஞ்சி _ ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய்- 5
எலுமிச்சம்பழ ஜூஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சிறிது
மஞ்சள் தூள் : கால் சிட்டிகை
தண்ணீர் : இரண்டரை கப்
உப்பு தேவையான அளவு

தாளிக்க :
எண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்
கடுகு : அரை டி.ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : அரை டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு : அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை

எப்படி செய்வது?

அடிகனமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய்சேர்த்து வதக்கி, காய்களை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ம.தூள், தக்காளி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீர் கொதிவந்தவுடன் எலுமிச்சம்பழ ஜூஸ், உப்பு சேர்த்து தணலை குறைத்து வைத்து ரவையை தூவியது போல் கொட்டி கிளறவும்
வாணலியை மூடி 15 நிமிடம் மிக குறைந்த தணலில் வேகவிடவும்.
இடையில் ஒரு முறை கிளறிவிடவும். கொத்தமல்லி தழை தூவி தேங்காய் சட்னி, பீர்க்கங்காய் பச்சடியுடன் பரிமாறவும்.

குறிப்பு:
மக்கா சோள ரவை வேக சிறிது நேரம் எடுக்கும், குழைய வேண்டுபவர்கள் இன்னும் அரைகப் தண்ணீர் அதிகம் சேர்க்கலாம். ம.தூள் வதக்கும் போதே சேர்ப்பதால் காய்கள் நிறம் மாறாமல் இருக்கும். எலுமிச்சம் பழ ஜூஸ் கொதித்தவுடன் விட்டால் கசப்படிக்காது. சமமாக பரவும்

ஞாயிறு, மே 19, 2013

கம்பு கொழுக்கட்டை




என்னென்ன தேவை:

கம்பரிசி : ஒரு கப்
மிக பொடியாக நறுக்கிய வெங்காயம் : ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிள்காய் : 5
பொடியாக நறுக்கிய மிளகாய் வற்றல் : 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சிறிது
தேங்காய் துருவியது: 2 பெரிய ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு : தேவைக்கேற்ப

தாளிக்க :

எண்ணெய் : 2 பெரிய ஸ்பூன்
கடுகு: அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு: ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு: ஒரு ஸ்பூன்


எப்படி செய்வது
கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும்
மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
அடிகனமான வாணலில் எண்ணெய் காயவைத்து கடுகு, உ.பருப்பு, கடலைபருப்பு, தாளித்து வெங்காயம், மிளகாய் வகைகள், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறத்திற்கு வதக்கவும், உப்பு சேர்க்கவும்
அரைத்த மாவை கொட்டி தணலை குறைத்து கிளறவும். மாவு கெட்டி பட்டதும் அத்துடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
ஆறியது கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்

எள்ளு இட்லிபொடி, கார சட்னியுடன் பரிமாறவும்

குறிப்பு

தேங்காய் துருவல் விரும்பினால் மட்டும் சேர்க்கலாம், அரைத்த உடனே செய்யலாம்


சனி, மே 11, 2013

கம்பு பருப்பு சாதம்





என்னென்ன தேவை

கம்பரிசி : ஒரு கப்
துவரம்பருப்பு: கால் கப்
பாசி பயிறு : கால் கப்
தண்ணீர் : 3 கப்
மஞ்சள் தூள் : கால் ஸ்பூன்
மிளகாய்தூள் : அரை ஸ்பூன்
நீளமாக நறுக்கிய வெங்காயம் : கால் கப்
நறுக்கிய தக்காளி : அரைகப்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது

தாளிக்க

எண்ணெய் : 2 ஸ்பூன்
கடுகு : அரை ஸ்பூன்

பொடிக்க:

மிளகு : அரை ஸ்பூன்
சீரகம் : அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் : 2
பூண்டு: 4

எப்படி செய்வது
கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
மிளகு, சீரகம் மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்
குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்க்கவும்
வதங்கியதும் தக்காளி, ம.தூள், மி தூள் அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்
தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசிபருப்பையும்  கொத்தமல்லி தழையும் சேர்த்து 5விசில் வேகவிடவும். தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும்.

குறிப்பு

கம்பரிசி சிறிது குழைய வேக வைப்பது சுவை கூட்டும், பருப்பு வகைகளுடன் தட்டபயிறும் சேர்த்துக்கொள்ளலாம்
மிளகாய் தூள்,மிளகாய் வற்றல், மிளகு போன்றவை சேர்ப்பதால் காரம் எவ்வளவு தேவையோ அதற்கேற்ப பிரித்துகொள்ளவும்

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

வரகு தம் பிரியாணி


என்னென்ன தேவை
வரகரிசி : 2கப்
கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிப்ளவர், உருளைகிழங்கு- பொடியாக நறுக்கியது : ஒன்றரை கப்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் : அரைகப்
பொடியாக நறுக்கிய தக்காளி : கால் கப்
எலுமிச்சம்பழ ஜூஸ் :  ஒரு பெரிய ஸ்பூன்
எண்ணெயும் நெய்யுமாக சேர்த்து : கால் கப்
ம.தூள் : அரை ஸ்பூன்
மிளகாய்தூள்: ஒரு ஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப
உப்பு: தேவையான அளவு
தண்ணீர் :மூன்றரை கப்
தயிர் : ஒரு பெரிய ஸ்பூன்

அரைக்க :

பட்டை : ஒரு பெரிய துண்டு
கிராம்பு : 3
புதினா, கொத்தமல்லி தழை : சிறிது
இஞ்சி : பெரிய துண்டு
பூண்டு : 7 (தோலுடன்)


தாளிக்க

பிரியாணி இலை : ஒன்று
பட்டை : ஒரு சிறிய துண்டு
கிராம்பு : இரண்டு



எப்படி செய்வது
வரகரிசியை கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்
அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும் நெய்யுமாக உள்ளதில் பாதி ஊற்றி தாளிப்பு பொருட்கள் போடவும்
வெங்காயத்தை சேர்த்து  வதக்கவும், வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து கிளறி காய்கறிகளை சேர்க்கவும், இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்க்கவும்
தக்காளி உடையாமல் கிளறி தயிர், ம.தூள், மிளகாய்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவேண்டும்
நன்கு வதங்கிய காய்களில் தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் உப்பும் எலுமிச்சம் பழ ஜூஸ்ஸும் சேர்த்து பிறகு அரிசியை போடவும்.
பெரிய தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை குறைத்து சிம்மில் 15 நிமிடம் வைக்கவும். இடையில் இரு முறை மீதமிருக்கும் நெய்யும் எண்ணெயும் சேர்த்து  அரிசி உடையாமல் கலந்துவிட வேண்டும்.
இப்போது முக்கால் பதம் வெந்திருக்கும். இனி தம் போடும் முறை.

தம் போடும் முறை
பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரிதணல் போடலாம்
எரிதணல் கிடைக்காதவர்கள் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்
அல்லது சூடான குக்கரை கூட வைக்கலாம். அதிகபட்சம் 10 நிமிடங்கள் போதும்.
இறுதியாக பிரியாணியை சிறிது நெய்விட்டு ஒரு  முறை கிளறி தயிர் பச்சடி, உருளைகிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்

குறிப்பு
பிரியாணி செய்முறையில் இது எளிய முறை, குக்கரில் வைத்தால் குழைந்து கட்டியாகிவிடும். அதே அளவு நேரத்தில் தம் பிரியாணி செய்துவிடலாம்.
தண்ணீரின் அளவு என்பது பொதுவாக ஒன்றுக்கு இரண்டு இருக்கும், ஆனால் உதிராக பிரியாணி வரவேண்டும் எனில் மொத்த அளவில் அரைகப் குறைத்தால் போதும்
புதினா, கொத்தமல்லி அரைத்து விடுவதால் குழந்தைகள் அதை ஒதுக்குவதை தவிர்க்கலாம்.
அதிக மசாலாவாசனை பிடித்தமானவர்கள் ஏலக்காய் கூட தாளிப்பில் சேர்க்கலாம்

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

ராகி மஞ்சூரியன் (ராயல் ராகி டிலைட்)




என்னென்ன தேவை
முளைகட்டிய ராகி : ஒரு கப்
 தேங்காய் : கால் கப்

இஞ்சி : ஒரு சிறிய துண்டு
பூண்டு : 4 பல்

பட்டை : ஒரு சிறிய துண்டு
கிராம்பு : 2
பச்சைமிளகாய் : 8
பொட்டுகடலை மாவு
உப்பு தேவைக்கேற்ப

மஞ்சூரியன் செய்ய
எண்ணெய் : ஒரு கரண்டி
சர்க்கரை ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் : ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு : ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு ஸ்பூன்
பெரியதாக நறுக்கிய வெங்காயம்
குடமிளகாய்
சோயா சாஸ்
சில்லி சாஸ்
உப்பு தேவைக்கேற்ப

அரைக்க :

முளைகட்டிய ராகியுடன் தேங்காய், இஞ்சி, பூண்டு, பட்டை , கிராம்பு, பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். அத்துடன் உப்பும் பொட்டுகட்லை மாவும் சேர்த்து கெட்டியான வடை மாவு பதத்தில் கலந்துவைக்கவும்.

எப்படி செய்வது
ராகி மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்,
வாணலில் எண்ணெய் விட்டு சர்க்கரையை சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் குடமிளகாய் சேர்த்து வதக்கவும், அத்துடன் சாஸ் வகைகளை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து, ராகி உருண்டைகளை போட்டு கிளறவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்

குறிப்பு : ராகி உருண்டைகளை வேக வைத்ததும் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தும் கொழுக்கட்டை போல் சாப்பிடலாம்


திங்கள், ஏப்ரல் 08, 2013

மில்லட் அவல் உப்புமா



என்னென்ன தேவை
வரகு அவல் : அரை கப்
சோள அவல் : அரை கப்
பட்டாணி : கால் கப்

வெங்காயம் : கால் கப்
பச்சை மிளகாய் : 6
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு சிறு துண்டு

எலுமிச்சம் பழ ஜூஸ் : ஒரு பெரிய ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
தண்ணீர் தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் : ஒரு பெரிய குழிகரண்டி
கடுகு : அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு : ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை : சிறிது



எப்படி செய்வது

அவல்களை ஒரு முறை சாதாரண தண்ணீரில் மண் போக கழுவவும். லேசான சுடு நீரில் 5 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி அவலை உதிர்த்து வைக்கவும்
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வதங்கியதும் பட்டாணி மஞ்சள் தூள், எலுமிச்சம்பழ ஜூஸ், உப்பு சேர்த்து குறைந்த தணலில் 3 நிமிடம் வதக்கிய பின் அவல் சேர்க்கவும். நன்றாக கிளறிவிடவும்.   தேங்காய் கிளறி சட்னியுடன் பரிமாறவும்

குறிப்பு

தேங்காய், புளி,  மிக்ஸ் வெஜ் உப்புமாக்களும் இதே முறையில் செய்யலாம், விரும்பினால் சிறிது வேர்க்கடலை பொடித்து போடலாம்.

ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

சாமை கல்கண்டு பாத்



சாமை அரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு : அரை கப்
நெய் : இரண்டு ஸ்பூன்
கல்கண்டு : முக்கால் கப்
திராட்சை, முந்திரி : ஒரு பெரிய ஸ்பூன்
தண்ணீர் : 4 கப்


எப்படி செய்வது
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்
சாமையும் பருப்பும் கழுவி குக்கரில் 6 விசில் வேகவிடவும்
கல்கண்டை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்
வாணலில் நெய் காயவைத்து திராட்சை முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்
சாமை சாதத்துடன் கல்கண்டு பொடியும் போட்டு நன்கு கிளறவும், முந்திரி திராட்சை சேர்க்கவும். தேவைப்படின் இன்னும் சிறிது நெய் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்

குறிப்பு:
தண்ணீருக்கு பதில் தண்ணீரும் பாலுமாக சேர்த்து வேக விட்டால் இன்னும் சுவை கூடும்





வியாழன், ஏப்ரல் 04, 2013

வரகு பொங்கல்




 
என்னென்ன தேவை

வரகரிசி : 1 கப்
பயத்தம் பருப்பு : அரைகப்
தண்ணீர் : 4 கப்
பச்சை மிளகாய் : 5 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி : ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
உப்பு : தேவையான அளவு

தாளிக்க :
நெய்யும் எண்ணெயுமாக சேர்த்து : கால் கப்
கடுகு : ஒரு சிட்டிகை
உளுத்தம் பருப்பு : அரை ஸ்பூன்
முந்திரி : 8
சீரகம் : கால் ஸ்பூன்
மிளகு : அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது


எப்படி செய்வது
வெறும் வாணலியில் ப. பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்
அடுப்பை அணைத்து அந்த சூட்டில் வரகரிசியை போட்டு வறுக்கவும்
இருமுறை கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வாணலியில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து சூடாக்கி, கடுகு, உ.பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து கிளறவும். சூடான கொத்சு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு

மிளகை சிறிது பொடித்து சேர்த்தால் மணமும் காரமும் கூடும். குக்கரில் நேரடியாக வைப்பதை விட ஒரு பாத்திரத்தில் பொங்கலை வேகவைத்தால் அடிபிடிப்பதை தவிர்க்கலாம்.