மில்லட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மில்லட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

வரகு தம் பிரியாணி


என்னென்ன தேவை
வரகரிசி : 2கப்
கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிப்ளவர், உருளைகிழங்கு- பொடியாக நறுக்கியது : ஒன்றரை கப்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் : அரைகப்
பொடியாக நறுக்கிய தக்காளி : கால் கப்
எலுமிச்சம்பழ ஜூஸ் :  ஒரு பெரிய ஸ்பூன்
எண்ணெயும் நெய்யுமாக சேர்த்து : கால் கப்
ம.தூள் : அரை ஸ்பூன்
மிளகாய்தூள்: ஒரு ஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப
உப்பு: தேவையான அளவு
தண்ணீர் :மூன்றரை கப்
தயிர் : ஒரு பெரிய ஸ்பூன்

அரைக்க :

பட்டை : ஒரு பெரிய துண்டு
கிராம்பு : 3
புதினா, கொத்தமல்லி தழை : சிறிது
இஞ்சி : பெரிய துண்டு
பூண்டு : 7 (தோலுடன்)


தாளிக்க

பிரியாணி இலை : ஒன்று
பட்டை : ஒரு சிறிய துண்டு
கிராம்பு : இரண்டு



எப்படி செய்வது
வரகரிசியை கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்
அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும் நெய்யுமாக உள்ளதில் பாதி ஊற்றி தாளிப்பு பொருட்கள் போடவும்
வெங்காயத்தை சேர்த்து  வதக்கவும், வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து கிளறி காய்கறிகளை சேர்க்கவும், இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்க்கவும்
தக்காளி உடையாமல் கிளறி தயிர், ம.தூள், மிளகாய்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவேண்டும்
நன்கு வதங்கிய காய்களில் தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் உப்பும் எலுமிச்சம் பழ ஜூஸ்ஸும் சேர்த்து பிறகு அரிசியை போடவும்.
பெரிய தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை குறைத்து சிம்மில் 15 நிமிடம் வைக்கவும். இடையில் இரு முறை மீதமிருக்கும் நெய்யும் எண்ணெயும் சேர்த்து  அரிசி உடையாமல் கலந்துவிட வேண்டும்.
இப்போது முக்கால் பதம் வெந்திருக்கும். இனி தம் போடும் முறை.

தம் போடும் முறை
பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரிதணல் போடலாம்
எரிதணல் கிடைக்காதவர்கள் நன்றாக கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்த தட்டின் மேல் வைக்கலாம்
அல்லது சூடான குக்கரை கூட வைக்கலாம். அதிகபட்சம் 10 நிமிடங்கள் போதும்.
இறுதியாக பிரியாணியை சிறிது நெய்விட்டு ஒரு  முறை கிளறி தயிர் பச்சடி, உருளைகிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்

குறிப்பு
பிரியாணி செய்முறையில் இது எளிய முறை, குக்கரில் வைத்தால் குழைந்து கட்டியாகிவிடும். அதே அளவு நேரத்தில் தம் பிரியாணி செய்துவிடலாம்.
தண்ணீரின் அளவு என்பது பொதுவாக ஒன்றுக்கு இரண்டு இருக்கும், ஆனால் உதிராக பிரியாணி வரவேண்டும் எனில் மொத்த அளவில் அரைகப் குறைத்தால் போதும்
புதினா, கொத்தமல்லி அரைத்து விடுவதால் குழந்தைகள் அதை ஒதுக்குவதை தவிர்க்கலாம்.
அதிக மசாலாவாசனை பிடித்தமானவர்கள் ஏலக்காய் கூட தாளிப்பில் சேர்க்கலாம்

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

ராகி மஞ்சூரியன் (ராயல் ராகி டிலைட்)




என்னென்ன தேவை
முளைகட்டிய ராகி : ஒரு கப்
 தேங்காய் : கால் கப்

இஞ்சி : ஒரு சிறிய துண்டு
பூண்டு : 4 பல்

பட்டை : ஒரு சிறிய துண்டு
கிராம்பு : 2
பச்சைமிளகாய் : 8
பொட்டுகடலை மாவு
உப்பு தேவைக்கேற்ப

மஞ்சூரியன் செய்ய
எண்ணெய் : ஒரு கரண்டி
சர்க்கரை ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் : ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு : ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி : ஒரு ஸ்பூன்
பெரியதாக நறுக்கிய வெங்காயம்
குடமிளகாய்
சோயா சாஸ்
சில்லி சாஸ்
உப்பு தேவைக்கேற்ப

அரைக்க :

முளைகட்டிய ராகியுடன் தேங்காய், இஞ்சி, பூண்டு, பட்டை , கிராம்பு, பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். அத்துடன் உப்பும் பொட்டுகட்லை மாவும் சேர்த்து கெட்டியான வடை மாவு பதத்தில் கலந்துவைக்கவும்.

எப்படி செய்வது
ராகி மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்,
வாணலில் எண்ணெய் விட்டு சர்க்கரையை சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் குடமிளகாய் சேர்த்து வதக்கவும், அத்துடன் சாஸ் வகைகளை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து, ராகி உருண்டைகளை போட்டு கிளறவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்

குறிப்பு : ராகி உருண்டைகளை வேக வைத்ததும் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்தும் கொழுக்கட்டை போல் சாப்பிடலாம்


வியாழன், ஏப்ரல் 04, 2013

வரகு பொங்கல்




 
என்னென்ன தேவை

வரகரிசி : 1 கப்
பயத்தம் பருப்பு : அரைகப்
தண்ணீர் : 4 கப்
பச்சை மிளகாய் : 5 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி : ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
உப்பு : தேவையான அளவு

தாளிக்க :
நெய்யும் எண்ணெயுமாக சேர்த்து : கால் கப்
கடுகு : ஒரு சிட்டிகை
உளுத்தம் பருப்பு : அரை ஸ்பூன்
முந்திரி : 8
சீரகம் : கால் ஸ்பூன்
மிளகு : அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது


எப்படி செய்வது
வெறும் வாணலியில் ப. பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்
அடுப்பை அணைத்து அந்த சூட்டில் வரகரிசியை போட்டு வறுக்கவும்
இருமுறை கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வாணலியில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து சூடாக்கி, கடுகு, உ.பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து கிளறவும். சூடான கொத்சு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு

மிளகை சிறிது பொடித்து சேர்த்தால் மணமும் காரமும் கூடும். குக்கரில் நேரடியாக வைப்பதை விட ஒரு பாத்திரத்தில் பொங்கலை வேகவைத்தால் அடிபிடிப்பதை தவிர்க்கலாம்.