புதன், ஜூன் 01, 2011

இட்லி - ஒரிஜினல்

சின்ன வயதில் எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாட்டி இருப்பாங்க, பேரு இட்லிக்கார ஆத்தா,  தண்ணியில் தேடும் சாம்பாரும், வெள்ளைகலர் தேங்காய் சட்னியும் சேர்த்து தினம் காலை 6 மணி முதல் இட்லி கிடைக்கும். அவர் இட்லி பாத்திரத்தில் துணி போட்டு ஊத்தும் அழகும் எடுத்து கொட்டி அடுக்கும் அழகும் பார்த்துட்டே இருக்கலாம். அதற்கு பிறகு அவ்வளவு மிருதுவான சுவையான இட்லி ரொம்ப குறைந்த இடங்களில் மட்டுமே சாப்பிட்டிருக்கேன்.

இட்லி நிறைய்ய வகைகளில் செய்யலாம், பாரம்பரிய முறை, மேலும் 3 வகைகளில் செய்யலாம். எதுவா இருந்தாலும் சூடாக இருக்கும் போது சாப்பிட்டால் மட்டுமே சுவை.

இன்னைக்கு பாரம்பரிய இட்லி. 

தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 4 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரிசியும் வெந்தயத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் (மட்டும்) ஊற வைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் மட்டும் ஊற வைக்கவும். முதலில் கல்லில் உளுந்தை சரியா 20 நிமிடம் மட்டும் ஆட்டி எடுக்கவும், அதிக தண்ணீர் ஊற்றாமல், நீர்த்து போகவிடாமல் சரியான பதத்தில் எடுக்கவும். அரிசியும் வெந்தயமும் ஆட்டி உளுந்துடன் கலந்து ஒரு 8 மணி நேரம் மட்டும் புளிக்க விடவும்.

எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளை விட துணி போட்டு ஊற்றும் பழைய முறை நல்லது. இட்லி ஒரு நல்ல டயட் உணவு, அதில் எண்ணைய் கலந்து அதையும் கெடுக்க வேண்டாமே.

வெள்ளைத்துணியில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

இட்லிக்கெல்லாம் ஒரு பதிவான்னு கேட்ககூடாது. இட்லி சுடத்தெரியாதோர் நாட்டில் பலர் உள்ளனர்.



1 கருத்து:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

சூப்பரா இருக்கும் போல இருக்கே !! நன்றி !! இன்னிக்கு ட்ரை பண்ணிட வேண்டியது தான் !!

கருத்துரையிடுக

நான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க ?